செய்திகள்

சூலூரில் பட்டப்பகலில் கல்லூரி பேராசிரியை வீட்டில் 33½ பவுன் நகை - ரூ. 15 லட்சம் கொள்ளை

Published On 2018-09-25 05:09 GMT   |   Update On 2018-09-25 05:09 GMT
சூலூரில் பனியன் கம்பெனி அதிபர் வீட்டில் 33½ பவுன் நகை மற்றும் 15 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Robbery

சூலூர்:

சூலூர் சிந்தாமணிப்புதூர் வி.ஐ.பி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார்(வயது 44). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா (42). இவர் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று பிரதீப்குமார் மற்றும் கவிதா ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். மகள் கல்லூரிக்கு சென்று விட்டார்.

கவிதா மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 33½ பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து கவிதா சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கணவன்-மனைவி வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Robbery

Tags:    

Similar News