செய்திகள்

நீரில் மூழ்கி பலியான 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Published On 2018-09-24 07:20 GMT   |   Update On 2018-09-24 07:20 GMT
நீரில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம், கொண்டையாம்பாளையம் கிராமம், கள்ளிப்பட்டி புதுப்பாலம் அருகே 15.9.2018 அன்று தண்டபாணி என்பவரின் மகன் சௌந்தர்ராஜன் மற்றும் அய்யாசாமி என்பவரின் மகன் தமிழரசன் ஆகிய இருவரும் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கல்குளம் மதுரா சூரிய பிள்ளையார் குப்பம் கிராமத்தில் 17.9.2018 அன்று கிணற்றின் மீது ஏறி குடிநீர் எடுக்கும் போது, கிணற்றின் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் உடைந்ததில், சங்கர் என்பவரின் மனைவி சசி, செல்லமுத்து என்பவரின் மனைவி மங்கை மற்றும் ஏழுமலை என்பவரின் மனைவி கமலா ஆகிய மூன்று நபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த சௌந்தர்ராஜன், தமிழரசன், சசி, மங்கை மற்றும் கமலா ஆகிய ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
Tags:    

Similar News