செய்திகள்

உத்தமபாளையம் அருகே 18-ம் கால்வாயில் ரேசன் அரிசி மூட்டைகளை வீசிச் சென்ற கும்பல்

Published On 2018-09-23 05:02 GMT   |   Update On 2018-09-23 05:02 GMT
உத்தமபாளையம் அருகே 18-ம் கால்வாயில் ரேசன் அரிசி மூட்டைகளை கும்பல் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. போலீசார் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்த போதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை.

அரசு பஸ், கூலித்தொழிலாளர்கள் ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் ரேசன் அரிசிகளை கடத்தி வருகின்றனர்.

உத்தமபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 18-ம் கால்வாய் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டதால் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது.

இப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மூட்டைகள் கிடந்தன. அவ்வழியே சென்ற விவசாயிகள் இதனை கண்டு சோதனை செய்து பார்த்தபோது அதில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற கும்பல் போலீசாருக்கு பயந்து மூட்டைகளை வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தமபாளையம் கோம்பை பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் அரிசி வினியோகம் சீராக இல்லை. இந்த நிலையில் கேரளாவுக்கு நாள்தோறும் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.

எனவே உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ரேசன் அரிசி கடத்தும் கும்பலை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News