செய்திகள்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: வேடமணியும் பக்தர்களுக்கான அலங்கார பொருட்கள் தயாரிப்பு தீவிரம்

Published On 2018-09-19 07:03 GMT   |   Update On 2018-09-19 07:03 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. #Dasarafestival

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

இதில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். இந்த திருவிழாவிற்காக விரதம் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் கொடியேற்றம் நடந்ததும் தங்களது வலது கையில் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கட்டி பின்பு தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராகசென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.

பக்தர்கள் காளி, முருகன், பரமசிவம், பார்வதி, கிருஷ்ணர் போன்ற பல்வேறு விதவிதமான வேடங்களை வித்தியாசமான ரசனையில் அணிந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முக்கிய ஊர்களில் சுற்றி வருவார்கள்.


வேடம் அணியும் பக்தர்களுக்கு அலங்கார பொருட்கள் மிகவும் அவசியம். தலை, கிரீடம், கண்மலர், கவசம், வாள், ஈட்டி, திரிசூலம், வேல், கத்தி, ஒட்டியானம் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் பணியில் உடன் குடியில் ஏராளமான தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ள தொழிலாளிகள் கூறுகையில், ‘சுவாமி வேடம் அணிபவர்கள் தலை கிரீடம், கண்மலர், வீரப்பல் போன்ற பொருட்களுக்கு முன்பதிவு செய்பவர்கள் அதிகம். தசரா குழுவிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மொத்தமாக முன்பதிவு செய்து முன்தொகையும் தந்துவிடுகிறார்கள். தனித் தனியாக வேடம் அணியும் பக்தர்கள் தங்கள் அளவுகளை கொடுத்து செல்கிறார்கள். தினசரி கூலிக்கு ஆட்கள் வைத்து இந்த பணிகள் நடந்து வருகிறது‘ என்றார். #Dasarafestival

Tags:    

Similar News