செய்திகள்

தே.மு.தி.க.வினர் நிலவேம்பு கசாயம் வழங்கிய வழக்கு - எல்.கே.சுதீஷ் உள்பட 7 பேர் விடுதலை

Published On 2018-09-14 09:51 GMT   |   Update On 2018-09-14 09:51 GMT
தே.மு.தி.க.வினர் நிலவேம்பு கசாயம் வழங்கிய வழக்கில் எல்.கே.சுதீஷ் உள்பட 7 பேர் விடுதலை செய்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.#DMDK #LKsudhish

திருச்சி:

திருச்சி மலைக்கோட்டை பகுதி தே.மு.தி.க. சார்பில் கடந்த 12.10.2017 அன்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் காந்தி மார்க் கெட் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தே.மு.தி.க. மாநில துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சி போலீசாரின் அனுமதியின்றி நடை பெற்ற தாகவும், பொது மக்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியதாகவும் காந்தி மார்க்கெட் போலீசார் எல்.கே.சுதீஷ் மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ், மாவட்ட அவைத்தலைவர் அலங்க ராஜ், பொருளாளர் மில்டன் குமார், மலைக்கோட்டை பகுதி செயலாளர் நூர் முகமது, வட்ட செயலாளர் வெல்டிங் சிவா மற்றும் ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5-ல் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இதில் எல்.கே.சுதீஷ் உள்பட 7 பேரும் ஆஜராகினர். போலீசார் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து இன்று 14-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி நாகப்பன் தெரிவித்தார்.

இன்று எல்.கே.சுதீஷ் உள்பட 7 பேரும் திருச்சி கோர்ட்டில் ஆஜராகினர். பின்னர் நீதிபதி நாகப்பன் தீர்ப்பு அளித்தார். அதில், நிகழ்ச்சிக்கு அனுமதி பெற வில்லை என்பதற்கும், பொது மக்களுக்கு இடையூறு செய்தனர் என்பதற்கும் போலீஸ் தரப்பில் கூறப்படும் குற்றச் சாட்டிற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லாததால் இந்த வழக்கில் இருந்து 7 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

இந்த வழக்கில் தே.மு.தி.க. சார்பில் வக்கீல்கள் பெனட் ராஜ், அகஸ்டின் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். #DMDK #LKsudhish

Tags:    

Similar News