செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் டீக்கடைக்காரர் பெயரில் வங்கியில் பல லட்சம் மோசடி

Published On 2018-09-12 09:22 GMT   |   Update On 2018-09-12 09:22 GMT
சென்னை ஆதம்பாக்கத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி டீக்கடைக்காரர் பெயரில் வங்கியில் பல லட்சம் மோசடி நடைபெற்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

சிவகங்கை மாவட்டம் பனங்குடியை சேர்ந்தவர் முருகேசன். தற்போது இவர் சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவில் தங்கியுள்ளார். அங்கு 35 வருடங்களாக டீக் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவர் கணக்கு வைத்திருக்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக்கு சென்று வியாபாரத்தை விரிவுபடுத்த ரூ.20 ஆயிரம் கடன் கேட்டார். அதையடுத்து அவர் வேறு வங்கியில் கடன்பெற்று இருக்கிறாரா? என வங்கி மேலாளர் பரிசோதித்து பார்த்தார்.

அப்போது ஒரு தனியார் வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் இவரது பெயரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரெடிட் கார்டு வாங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும் இவரது பெயரில் 3 போலிகம்பெனிகள் உருவாக்கி ரூ.3 லட்சத்துக்கு கடன்பெற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

முருகேசன் பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டையும், டிரைவிங் லைசன்சும் தயாரித்துள்ளனர். வேறு செல் போன் நம்பரும் பெற்றுள்ளனர். அதை வைத்து தான் கிரெடிட் கார்டு பெறப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் முருகேசன் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News