செய்திகள்

வருங்கால சந்ததியினருக்கு நல்ல பூமியை விட்டுச்செல்ல வேண்டும்- அன்புமணி பேச்சு

Published On 2018-09-03 10:05 GMT   |   Update On 2018-09-03 10:05 GMT
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வருங்கால சந்ததியினருக்கு நாம் நல்ல பூமியை விட்டுச் செல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். #anbumani

ராமநாதபுரம்:

தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களை காக்கவும், வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் என்ற விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் பா.ம.க. சார்பில் ராமநாதபுரம் சந்தை திடலில் நடந்தது. இதில் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

வைகை ஆற்றை காப்பதில் நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபட்டுள்ளது.

தண்ணீர் தேக்கும் திட்டங்கள் அரசிடம் இல்லை. மன்னர் காலத்தில் கட்டிய நீர்த்தேக்கங்களை 50 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் கண்டுகொள்ள வில்லை. இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கட்சிகள்தான் தமிழகத்தில் உள்ளன.

நீர் மேலாண்மை திட்டத்தில் திராவிட கட்சிகள் முதலீடு செய்யவில்லை. மாறாக இலவச திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். தமிழக முன்னேற்ற திட்டங்கள் பா.ம.கவிடம் நிறைய உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீரின்றி வைகை வறண்டுள்ளது. வைகை அணையின் 71 அடி உயரத்தில் 21 அடி தூர்ந்து போயுள்ளது.

258 கி.மீ. நீளம் கொண்ட தமிழகத்தின் 4-வது பெரிய ஆறான வைகையை நாம் காப்பாற்ற வேண்டும்.

தமிழக மீனவர்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை அரசு துப்பாக்கியால் சுட்டால் ஒரு செய்தியுடன் முடிந்து விடுகிறது.

அதே சமயத்தில் மற்ற மாநில மீனவர்கள் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்துகிறது. எங்களுக்கு அரசியல் நோக்கம் கிடையாது. ஓட்டு நோக்கம் கிடையாது. தமிழகத்திலுள்ள நீர்நிலைகளை நாம் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. வருங்கால சந்ததியினருக்கு நாம் நல்ல பூமியை விட்டுச் செல்ல வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் மிக மோசமான விளைவுகள் வரவிருக்கிறது. ஓராண்டு வெள்ளம். அடுத்த மூன்று ஆண்டு வறட்சி. அடுத்து மழை, அடுத்து வெள்ளம் இப்படி மாறி மாறித்தான் வரவிருக்கிறது. நாம் இதற்கு தயார் நிலையிலேயே இருக்க வேண்டும்.

150 ஆண்டுகளுக்கு முன் புவியின் சராசரி வெப்ப நிலை 14 சென்டி கிரேட் ஆக இருந்தது. இன்று 15 சென்டிகிரேட் ஆக மாறி உள்ளது. 15.5 சென்டிகிரேட் ஆக ஆகும்போது உலகம் அழிந்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல்ரமணன், பொருளாளர் திலகபாமா, துணை செயலாளர் தளபதி ராஜ்குமார், மாவட்ட செயலாளர் அக்கீம் உள்பட பலர் பங்கேற்றனர். #anbumani

Tags:    

Similar News