செய்திகள்
சாலை மறியல் செய்ய திரண்ட பொதுமக்கள்.

மரக்காணம் அருகே பஸ்சுக்கு காத்திருந்த மாணவர்கள் மீது தாக்குதல்- பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-08-27 09:54 GMT   |   Update On 2018-08-27 09:54 GMT
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது கீழ்பேட்டை கிராமம். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த இன்பரசன் (வயது 19), துவரநாதன் (20), சுரேஷ்(16) உள்ளிட்ட 20 மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது கீழ்பேட்டை மீனவர்குப்பத்தை சேர்ந்த ஒரு கும்பல் உருட்டு கட்டையுடன் அங்கு வந்தனர். திடீரென மாணவர்களை சரமாரியாக கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த தாக்குதலில் இன்பரசன், துவரநாதன், சுரேஷ் ஆகிய 3 மாணவர்களும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கீழ்பேட்டை கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர். மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அந்த பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கீழ்பேட்டை கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்களிடம் போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே மோதல் சம்பவம் தொடர்பாக கீழ்பேட்டை மீனவர் குப்பத்தை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மோதல் சம்பவத்தால் கீழ்பேட்டை கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News