search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் தாக்குதல்"

    • விடுமுறை நாட்களில் வகுப்பில் எடுத்த பாடங்களை ஏன் ஏழுதி வரவில்லை என கேட்டு மாணவனை தலைமை ஆசிரியை அடித்துள்ளார்.
    • அதிகாரிகள் தலைமை ஆசிரியை மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள வாலிசெட்டிபட்டியை சேர்ந்தவர் மாயவன் (வயது38). கூலித்தொழிலாளி. இவருக்கு கவுதம் (வயது13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கவுதம் பிலாத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லவில்லை. மீண்டும் பள்ளிக்கு வந்தபோது அவரை தலைமை ஆசிரியர் சாந்தி கண்டித்துள்ளதாக தெரிகிறது. விடுமுறை நாட்களில் வகுப்பில் எடுத்த பாடங்களை ஏன் ஏழுதி வரவில்லை என கேட்டு அவரை அடித்துள்ளார். இதனால் கவுதம் மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இது குறித்து மாயவன் கேட்டபோது நடந்த விவரங்களை கூறி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாயவன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் இன்று புகார் அளித்தார். அந்த புகாரில் தலைமை ஆசிரியர் சாந்தி தொடர்ந்து இதேபோல் பள்ளி மாணவர்களை தாக்கி மிரட்டி வருகிறார். நாங்களும் இது குறித்து புகார் சொல்லாமல் இருந்து வந்தோம். ஆனால் தற்போது வரம்பு மீறி செயல்படுவதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதையே நிறுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனைப்போலவே பல குழந்தைகள் இதுபோல் பாதிப்படைந்து வருகின்றனர். அதிகாரிகள் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    இது குறித்து வட்டார கல்வி அதிகாரியிடம் கேட்டபோது மாணவன் தாக்கப்பட்டது குறித்து புகார் தற்போது போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தற்காலிகமாக பாளை கோரிப்பள்ளத்தை சேர்ந்த கிங்ஸ்லி என்பவர் வேலை பார்த்து வந்தார்.
    • காயம் அடைந்த 3 மாணவர்களும் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    நேற்று அந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 3 மாணவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் காயங்களுடன் சிகிச்சையில் சேர்ந்தனர். அவர்கள் தங்களை பள்ளி ஆசிரியர் தாக்கியதாக புகார் கூறினர். அந்த மாணவர்களுக்கு கண் உள்ளிட்ட பாகங்களில் காயங்கள் இருந்தன.

    இதுதொடர்பாக பாளை போலீசார் விசாரித்து வந்த நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரை கம்பால் அடிக்கும் காட்சிகள் வெளியாகின. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தியதில், பாளை அரசு உதவி பெறும் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்தது.

    அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தற்காலிகமாக பாளை கோரிப்பள்ளத்தை சேர்ந்த கிங்ஸ்லி(வயது 40) என்பவர் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் நடந்த மதிப்பீட்டு தேர்வில் பர்கிட் மாநகரை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். அதனால் ஆங்கில ஆசிரியர் அந்த மாணவரை அடித்துள்ளார்.

    இந்த காட்சிகளை அதே வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து பரவ விட்டனர். இந்த தகவல் ஆசிரியர் கிங்ஸ்லிக்கு தெரியவரவே, வீடியோ எடுத்த 2 மாணவர்களை தனியாக அழைத்து சென்று அடித்துள்ளார். இதனால் காயம் அடைந்த 3 மாண வர்களும் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து பாளை போலீசார், ஆசிரியர் கிங்ஸ்லி மீது இந்திய தண்டனை சட்டம் 294(பி), 323 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ஆசிரியர் கிங்ஸ்லியை 'சஸ்பெண்டு' செய்து பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் உத்தரவிட்டார்.

    • பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நின்றதும் கல்லூரி மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர். மின்சார ரெயில் வியாசர்பாடி-பேசின் பிரிட்ஜ் இடையே உள்ள ராமலிங்கம் கோவில் அருகே சென்றபோது இருதரப்பு கல்லூரி மாணவர்கள் இடையே ரூட்டு தல தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

    அப்போது திடீரென அவர்கள் மின்சார ரெயிலுக்குள்ளேயே கற்கறை வீசி தாக்கிக்கொண்டனர். அந்த நேரத்தில் திருப்பதி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ்ரெயில் மீதும் கல்விழுந்தது. இதில் ரெயிலில் பயணம் செய்த பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நின்றதும் கல்லூரி மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாலக்காடு மாவட்டம் பாறைக்களத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் இரவு நேரத்தில் பள்ளியின் சுவர் ஏறி குதித்து மாணவர் விடுதிக்குள் புகுந்தார்.
    • தொடர்ந்து மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வரும் சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் நவக்கரை அடுத்த மாவுத்தம்பதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கண்ணதாசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கே.ஜி.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மாவுத்தம்பதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதன் அருகே விடுதியும் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பாறைக்களத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் இரவு நேரத்தில் பள்ளியின் சுவர் ஏறி குதித்து மாணவர் விடுதிக்குள் புகுந்தார்.

    பின்னர் அங்கிருந்த மாணவர்கள் சிலரை தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசினார்.

    இதை அங்கு பணியில் இருந்த ஆசிரியை ஒருவர் பார்த்து தட்டி கேட்டார். அதற்கு அந்த சிறுவன், அவரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த சிறுவன் கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மாணவர் விடுதி மட்டுமின்றி, மாணவிகள் விடுதிக்குள்ளும் சென்று, அவர்களையும் தாக்கி, அவர்களை பயமுறுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அங்கு பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது.

    எனவே தொடர்ந்து மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வரும் சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் கே.ஜி.சாவடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவனை தாக்கும் வீடியோக்களை அங்கிருந்த மற்றொரு மாணவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சங்கர் பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்தக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்களுக்கும் ஜூனியர் மாணவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

    கடந்த வாரம் கல்லூரி விடுதிக்குள் புகுந்த 10 சீனியர் மாணவர்கள் விடுதி அறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு இருந்த ஒரு மாணவரிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் போதனைகளை கூற சொன்னார்கள். அவர் மறுத்தார்.

    இதனால் அவரை தாக்கினர். அடி தாங்காமல் துடித்த அவர் அந்த மதத்தின் போதனைகளை கூறினார். இருந்தாலும் சீனியர் மாணவர்கள் அந்த மாணவனை கடுமையாக அடித்து உதைத்தனர்.

    கீழே தள்ளி அவர் மீது வாலிபர் ஒருவர் உட்கார்ந்து கொண்டு கை கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

    அவருடன் வந்த மாணவர்கள் மாணவனை காலால் சரமாரியாக எட்டி உதைத்தும், முகத்தில் கைகளால் தாக்கியும் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் மாணவனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணி பர்சை எடுத்துக் கொண்டு சென்றனர். மாணவனை தாக்கும் வீடியோக்களை அங்கிருந்த மற்றொரு மாணவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சங்கர் பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தாக்கிய 5 சீனியர் மாணவர்களை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×