செய்திகள்

ஒகேனக்கல்லில் 1 லட்சம் கன அடியாக நீர்வரத்து சரிவு

Published On 2018-08-21 04:32 GMT   |   Update On 2018-08-21 04:32 GMT
ஒகேனக்கலுக்கு நேற்று காலை நீர்வரத்து சற்று சரிந்து 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 1 லட்சம் கன அடி ஆனது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த ஓரு மாதமாக கொட்டித்தீர்த்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து 2 லட்சம் கன அடிக்கும் மேலாக காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் காவிரி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில மழை சற்று தணிந்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக 1 லட்சத்து 75 ஆயிரம் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தது. நேற்று காலை நீர்வரத்து சற்று சரிந்து 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 1 லட்சம் கன அடி ஆனது.

இருந்தாலும் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இன்று 43-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்ட உள்ளதால் நாளை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. #Hogenakkal #Cauvery

Tags:    

Similar News