செய்திகள்
வயலில் கவிழ்ந்து கிடக்கும் கல்லூரி பஸ்சை படத்தில் காணலாம்.

அன்னூர் அருகே தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து- 15 மாணவர்கள் படுகாயம்

Published On 2018-08-07 05:15 GMT   |   Update On 2018-08-07 05:15 GMT
அன்னூர் அருகே இன்று காலை தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்:

கோவை பெரியநாயக்கன் பாளையம் ஜோதிபுரத்தில் பயனீர் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களின் வசதிக்காக கல்லூரி பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை அன்னூரில் இருந்து கல்லூரி பஸ் புறப்பட்டது. பஸ்சை சிறுமுகையை சேர்ந்த கருப்புசாமி ஓட்டினார். பஸ் லிங்காபுரம், இலுப்பநத்தம், ஆத்திக்குட்டை ஆகிய இடங்களில் உள்ள மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. ஆத்திக்குட்டையை கடந்து வந்தபோது ஒரு வளைவில் பஸ்சை டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது பஸ் ஸ்டேரிங் ஜாம் ஆகிவிட்டது. இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இடிபாடிகளில் சிக்கிய மாணவ, மாணவிகள் அலறி சத்தம்போட்டனர்.

சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 15 மாணவ- மாணவிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆத்திக்குட்டையை சேர்ந்த பி.காம் முதலாம் ஆண்டு மாணவர் மது (18) என்பவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் படுகாயம் அடைந்த மற்ற மாணவ, மாணவிகள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேட்டுப்பாளையம், கோவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News