செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியை தாண்டியது

Published On 2018-07-02 04:51 GMT   |   Update On 2018-07-02 04:51 GMT
கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியை தாண்டியது.
மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 109 அடியை எட்டியுள்ளது. அணை நிரம்ப 15 அடியே தேவைப்படுகிறது. 2 அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால் அந்த அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து கடந்த 28-ந் தேதி 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் தமிழக, கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது.

இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் பூட்டப்பட்டது.

மேலும் அருவிகளில் குளிக்கவும், பரிசலில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நேற்று 2-வது நாளாக நீடித்தது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் நீர்பாசனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வந்து சேர்ந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் உயரத்தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் 1,414 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10 ஆயிரத்து 383 கனஅடியாகவும், பகல் 12 மணிக்கு 15 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 18 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது. இன்று காலை 18 ஆயிரத்து 184 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் நேற்று முன்தினம் 57.11 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 58.23 அடியாக உயர்ந்தது. அணை நீர்மட்டம் 60.3 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த 2 நாட்களில் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடிவீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடகா மற்றும் கேரளாவில் மழை குறைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. கபினி அணைக்கு நேற்று 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று 5 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் கபினி அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டு, 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறையத் தொடங்கி உள்ளது. ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இன்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் வேகமாக உயர்ந்த நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்வதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

Tags:    

Similar News