செய்திகள்

கபினி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று இரவு மேட்டூருக்கு வந்து சேரும்

Published On 2018-06-30 05:09 GMT   |   Update On 2018-06-30 05:09 GMT
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூருக்கு வந்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 3 நாட்களாக மீண்டும் கன மழை பெய்து வருகிறது.

இதனால் கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு வரும் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மைசூரு மாவட்டத்தில் கபினி ஆற்றின் இடையே அமைந்துள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கபினி அணைக்கு நேற்று காலை 21 ஆயிரத்து 353 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 82.23 அடியாக இருந்தது. கேரளாவில் மழை தொடர்வதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து 20 ஆயிரத்து 83 கன அடி தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டது.

இதே போல கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று நீர்வரத்து 10 ஆயிரத்து 168 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 106.5 அடியாக இருந்ததால் அணையில் இருந்து நேற்று காலை 3482 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகாவில் உள்ள 2 அணைகளிலும் இருந்து மொத்தம் நேற்று 25 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் நேராக தமிழகத்தை நோக்கி வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றை கடந்து இன்று இரவு மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயரமாக வாய்ப்புள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 1300 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 800 கன அடியாக குறைந்தது. அணையில் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. சனிக்கிழமை என்பதால் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 1553 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1414 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று நேற்று 57.02 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 57.11 அடியாக உயர்ந்தது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று இரவு முதல் மேட்டூருக்கு மீண்டும் வரும் என்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இனிவரும் நாட்களில் வேகமாக உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News