செய்திகள்

சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

Published On 2018-06-12 10:35 GMT   |   Update On 2018-06-12 10:35 GMT
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் சேர்வலாறு, அடவிநயினார் அணைகளில் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.
நெல்லை:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள பிரதான பாசன அணையான பாபநாசம் அணைக்கும் அதிகளவு தண்ணீர் வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 61.15 அடியாக இருந்தது. இன்று 63.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1251 கன அடி தண்ணீர் வருகிறது.

இதேபோல் நேற்று 91.53 அடியாக இருந்த சேர்வலாறு அணை ஒரே நாளில் 12.50 அடி உயர்ந்து 104.07 அடியானது. அணைக்கு வினாடிக்கு 1417 கன அடி தண்ணீர் வருகிறது. நேற்று 81.10 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 82.50 அடியாகவும், 59 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் 60 அடியாகவும் உயர்ந்துள்ளது.

66.75 அடியாக இருந்த ராமநதி அணை நீர்மட்டம் இன்று 68.50 அடியாகவும், 59.06 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் 63.57 அடியாகவும் அதிகரித்து உள்ளன. கொடுமுடியாறு அணை ஏற்கனவே நிரம்பி விட்டது.

நேற்று நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, கடையநல்லூர் பகுதிகளில் கனமழை பெய்தது. செங்கோட்டை மலை பகுதிகளில் உள்ள குண்டாறு அணை பகுதியிலும், கடையநல்லூர் அருகே உள்ள அடவிநயினார் அணை பகுதியிலும் கனமழை கொட்டியது. இதனால் அந்த அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வந்தது.

நேற்று 92 அடியாக இருந்த அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி அதிகரித்து 102.50 அடியாகவும், 28.88 அடியாக இருந்த குண்டாறு அணை நீர்மட்டம் 31.15 அடியாகவும் உயர்ந்தது.
Tags:    

Similar News