செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு கவிழ்வது உறுதி- திருநாவுக்கரசர் பேச்சு

Published On 2018-05-19 10:13 GMT   |   Update On 2018-05-19 10:13 GMT
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு கவிழும் என்று ராமநாதபுரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ராமநாதபுரத்தில் நேற்று இரவு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

இந்தியாவில் ஏராளமான கட்சிகள் உள்ளது. தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளது. சில கட்சிகள் ஜாதி கட்சிகள், சில கட்சிகள் மதக்கட்சிகள். தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி என்றால் தி.மு.க. அ.தி.மு.க. தான். ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. இரண்டு ,மூன்று அணியாக சிதறி விட்டது. தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.

பா.ஜனதாவை வீழ்த்தக் கூடிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. கட்சி ஆரம்பித்த நடிகர்கள் எல்லாம் முதல- அமைச்சராக வந்து விட முடியவில்லை. இதை முடிவு செய்ய வேண்டியது மக்கள்.

நடிகர்களை பொறுத்த வரை முதல் தேர்தலிலே ஆட்சிக்கு வந்து விட வேண்டும். இல்லை என்றால் வாழ்க்கையிலேயே வரமுடியாது. காங்கிரஸ் கட்சி 138 ஆண்டுகள் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கட்சி . உலகத்திலேயே மூத்த கட்சி காங்கிரஸ் கட்சி.

கர்நாடகா மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜனதா அழைத்து எடியூரப்பாவை முதல் அமைச்சராக பதவியேற்பு செய்தது ஜனநாயக படுகொலை.

பதவி வெறிபிடித்து பா.ஜனதா கட்சி அலைகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருக்க வேண்டும் என்று மோடி நினைக்கிறார். அதனால் தான் பெரும்பான்மை இல்லாத நிலையில் காநாடகாவில் பா.ஜனதாவை கவர்னர் அழைத்து எடியூரப்பாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசி வருகிறது. பிரதமர் மோடி வாக்கு வங்கிக்காக மக்களை பிரிக்க நினைக்கிறார். நாடாளுமன்றத்தேர்தல் எப்போது வந்தாலும் மிகப்பெரிய வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி. அதை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு கவிழும். ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு ஒரு நாள் முதலமைச்சராக எடியூரப்பா பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News