செய்திகள்

பிரதமர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் - அய்யாக்கண்ணு அறிவிப்பு

Published On 2018-05-07 07:00 GMT   |   Update On 2018-05-07 07:00 GMT
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாக கடலில் கலக்கும் நதிகளை தமிழகத்துக்கு திருப்ப மத்திய அரசு தடையாக இருந்தால் பிரதமர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் என்று அய்யாக்கண்ணு கூறினார். #Ayyakannu #PMModi
தருமபுரி:

தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று காலை தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழியை சந்தித்து மனு கொடுத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய விவசாயிகள் தொடர்பான திட்டங்கள் குறித்து அந்த மனுவில் கூறி இருந்தார். மனு கொடுத்து விட்டு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தருமபுரி மாவட்ட விவசாயிகள் பிரச்சனை குறத்து கலெக்டரிடம் பேசினேன். தருமபுரி மாவட்டத்தில் சாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் எந்த வகையிலும் ஏரி, வாய்க்கால் வழியாக அமைக்க கூடாது என்று கலெக்டரிடம் வலியுறுத்தினேன். அவரும் ஏரி, வாய்க்கால்களை பாதிக்காத வகையில் சாலைகள் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதேபோல சின்னாறில் ஒரு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். எண்ணே கொல் புதூர் திட்டம் ரூ.275 கோடி செலவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.



மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நதிகள் கேரளா வழியாக ஓடி வீணாக கடலில் கலக்கிறது. இந்த நதிகளை தமிழகம் பக்கம் திருப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு தடையாக இருந்தால் பிரதமர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்.

என்னை சிறையில் அடைத்தாலும் கவலைப்பட மாட்டேன். 19 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 60 ஆயிரம் கோடி சம்பளம் கொடுப்பதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதில் ஒரு சிறு தொகையை விவசாயிகளுக்கு ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #Ayyakannu #PMModi

Tags:    

Similar News