செய்திகள்

தஞ்சை அருகே கோவில் திருவிழாவில் 2 பேர் படுகொலை

Published On 2018-05-01 06:34 GMT   |   Update On 2018-05-02 02:45 GMT
தஞ்சை அருகே கோவில் திருவிழாவில் 2 பேர் குத்திக்கொலை செய்யப்பட்டனர். அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அதிராம்பட்டினம்:

தஞ்சை அருகே அதிராம்பட்டினம் மஞ்சவயல் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணியன் கோவிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு தேரோட்டம் தொடங்க இருந்தது. இதற்காக ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்தே கோவிலுக்கு வந்து குவிந்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் தேர் நிறுத்தப்பட்ட இடத்தின் அருகே இரு பிரிவினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இருபிரிவினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

அப்போது ஒரு பிரிவினர் கத்தி, சோடா பாட்டில்கள், உருட்டுக்கட்டைகளால் எதிர்தரப்பினரை சரமாரியாக தாக்கினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் பதிலடி கொடுக்க முடியாமல் நிலைகுலைந்து போனார்கள். இதனை பார்த்து பக்தர்கள் உயிர் தப்பிக்க நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இந்த தாக்குதலில் அதே ஊரை சேர்ந்த சிவநேசன் (வயது 19), பிரதீப்(31) ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜன், டி.ஐ.ஜி. லோகநாதன், 3 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் மோதலில் இறந்த இருவரின் உடல்களையும் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுடுகாட்டு பிரச்சினை சம்பந்தமாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News