செய்திகள்
பதிவாளர் சின்னையா மதுரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்த காட்சி.

மதுரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பல்கலைக்கழக பதிவாளரிடம் விசாரணை

Published On 2018-04-20 10:19 GMT   |   Update On 2018-04-20 10:19 GMT
அதிகாரி சந்தானம் மதுரையில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
மதுரை:

கல்லூரி மாணவிகளை பாலியல் வலை விரித்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் மாணவிகளிடம் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப் மூலம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் ஒரு நபர் கமி‌ஷனை அமைத்தார்.

அதன் பேரில் அதிகாரி சந்தானம் மதுரையில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் நேற்று பல்கலைகக்கழகத்திற்கு சென்று இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை பெற்றார்.

இந்த நிலையில் இன்று மதுரை விசாலாட்சி புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி சின்னையா இன்று ஆஜரானார். காலை 11.45 மணி முதல் 12.45 மணி வரை ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சேகர், வேல்முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

சின்னையாவிடம் பேராசிரியை நிர்மலா தேவி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. நிர்மலா தேவி விவகாரம் தொடர்புடைய ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சின்னையாவிடம் இருந்து பெற்றனர்.



Tags:    

Similar News