செய்திகள்

திருமணம் செய்வதற்காக 10-ம் வகுப்பு மாணவனை கடத்திய இளம்பெண் கைது

Published On 2018-04-20 06:12 GMT   |   Update On 2018-04-20 06:12 GMT
அரூர் அருகே திருமணம் செய்வதற்காக 10-ம் வகுப்பு மாணவனை கடத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (15).

இவர் அரூர் அருகே உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாக இறுதி தேர்வுக்காக அவர் படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் அந்த மாணவரின் கிராமத்தில் உறவினர் ஒருவரின் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மாணவர் பாஸ்கரின் உறவினர் கீதா (23) என்பவர் வந்திருந்தார்.

அப்போது கீதாவுக்கும், பாஸ்கருக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமண விழா முடிந்த பிறகும் அவர்கள் இருவரும் சந்தித்து பேசி வந்தனர்.

பாஸ்கரை திருமணம் செய்து கொள்வதற்கு கீதா விரும்பினார். இதை அறிந்ததும் பாஸ்கரின் பெற்றோர் கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர். பாஸ்கரிடம் கீதாவை நீ சந்தித்து பேசக்கூடாது என்று எச்சரித்தனர்.

ஆனால் அதையும் மீறி கீதாவை பாஸ்கர் சந்தித்து பேசி வந்தார். பாஸ்கரை மறக்கமுடியாத கீதா அவரை கடத்தி செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த வாரம் பாஸ்கரை கடத்தி சென்றுவிட்டார்.

பாஸ்கர் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களிலும் தேடினார்கள். 2 நாட்களுக்கு பிறகுதான் பாஸ்கரை கீதா திட்டமிட்டு கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.

பாஸ்கரை அவர் பெங்களூரில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பெங்களூரில் அவர்கள் இருவரும் தங்கி இருந்த இடம் தெரிய வந்தது.

இதையடுத்து பாஸ்கரின் பெற்றோர் கோட்டபட்டி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் பெங்களூர் சென்று இருவரையும் பிடித்து அழைத்து வந்தனர்.

கீதா மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் கைது செய்யப்பட்டார். அவர் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவர் பாஸ்கர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

பிறகு அவர் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Tags:    

Similar News