செய்திகள்

வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்கிறேன்- திருக்கோவிலூர் மாணவனை கொன்ற வாலிபர் போலீசாரிடம் கெஞ்சல்

Published On 2018-04-08 11:27 GMT   |   Update On 2018-04-08 11:27 GMT
என்னை வெளியே விட்டால் பொதுமக்கள் அடித்து கொன்று விடுவார்கள், எனவே வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்கிறேன் என்று மாணவனை கொன்ற வாலிபர் போலீசாரிடம் கெஞ்சினார்.

திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி (வயது 45). இவர் தனது மகள் தனம் (14).மகன் சமயன் (9). ஆகியோருடன் அங்குள்ள குடிசை வீட்டில் வசித்து வருகிறார். மகன் சமயன் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஆராயி வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் புகுந்து ஆராயி, தனம், சமயன் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதில் தாக்குதலில் காயம் அடைந்த சமயன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டான்.

படுகாயம் அடைந்த ஆராயி, தனம் ஆகி யோர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடலூர் மாவட்டம் மேல்புனகிரியை சேர்ந்த தில்லைநாதன் (37) என்பவனை கைது செய்தனர்.

அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலி அம்பிகாவையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் தில்லைநாதனை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அவனை வெள்ளம் புத்தூர் கிராமத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவன் மாணவன் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து நடித்து காட்டினான். தில்லைநாதன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாகவும் போலீசார் அவனிடம் விசாரணை மேற் கொண்டனர்.

நான் இதுவரை செய்த குற்றங்களை ஒப்புக் கொள்கிறேன். என்னை வெளியில் விட்டால் பொதுமக்கள் அடித்தே கொன்று விடுவார்கள். எனவே என்னை சிறையிலேயே அடைத்து விடுங்கள் சிறையிலேயே வாழ்நாளை கழித்து விடுகிறேன் என்று போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறி அழுது கெஞ்சினான்.

5 நாட்கள் விசாரணை முடிந்ததால் நேற்று மாலை தில்லைநாதனை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினர். பின்னர் அவன் மீண்டும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தாக்குதலில் சிறுமி தனம் பாதிக்கப்பட்டதால் சிறுமிகளுக்கு எதிரான பாலியியல் வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழும் தில்லைநாதன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்றதுக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தில்லை நாதன் மீது விழுப்புரம் மாவட்டத்தில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம்.

இந்த வழக்கில் விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். தில்லைநாதனுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News