செய்திகள்

சிவகாசி வெடிவிபத்தில் பட்டாசு ஆலை மேலாளர் - போர்மேன் கைது

Published On 2018-04-07 03:56 GMT   |   Update On 2018-04-07 03:56 GMT
சிவகாசி வெடிவிபத்தில் 4 பேர் பலியான சம்பவத்தில் பட்டாசு ஆலை மேலாளர், போர்மேனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

நேற்று இங்குள்ள அறையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது. அப்போது மருந்து உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்தன.

இதில் அந்த அறையில் வேலை பார்த்து கொண்டிருந்த மாரனேரி சுப்பிரமணி (வயது32), கண்ணார்பட்டி தெய்வானை (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.

கிச்சநாயக்கன் பட்டியை சேர்ந்த முருகவேல் மனைவி கணபதி (30), முத்துமாரி, பரமசிவம், விஜயலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிவகாசி சிறப்பு தீ தடுப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் கணபதி, முத்துமாரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலை மேலாளர் நாராயணசாமி (49), போர்மேன் அரவிந்தகுமார் (45) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் சாத்தூர் அருகே உள்ள ராமுதேவன் பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சேகர் (38), ரவி (47) ஆகிய தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News