செய்திகள்

உஷா பலியான வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் காமராஜின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி

Published On 2018-03-22 06:54 GMT   |   Update On 2018-03-22 06:54 GMT
உஷா பலியான வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் காமராஜின் ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்து திருச்சி கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.
திருச்சி:

தஞ்சை மாவட்டம் சூலமங்கலத்தை சேர்ந்த ராஜா, தனது மனைவி உஷாவுடன் கடந்த 7-ந்தேதி திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே சென்ற போது, அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

ஹெல்மெட் அணியாமல் வந்த ராஜாவை நிறுத்திய போது அவர் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த காமராஜ், பின்னாலேயே துரத்தி சென்று ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் ராஜாவும், உஷாவும் தடுமாறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் காமராஜ், ஜாமின் கேட்டு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. அப்போது மக்கள் அதிகாரம் அமைப்பினர், உஷாவின் கணவர் ராஜா, வக்கீல் சங்கத்தினர் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காமராஜின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி லோகேஸ்வரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காமராஜ் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி குமரகுரு, இன்ஸ்பெக்டர் காமராஜின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டரின் காவல் வருகிற 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News