செய்திகள்

நடிகை பிரியா வாரியர் போல் கண்ணடித்தால் ஒரு வருடம் சஸ்பெண்டு

Published On 2018-03-20 11:49 GMT   |   Update On 2018-03-20 11:49 GMT
கோவையில் கல்லூரி மாணவிகள் பிரியா வாரியார் போல் கண்ணடித்தால் ஒரு வருடம் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
கோவை:

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் நடிகர் பிரியா வாரியார் பள்ளி வகுப்பில் அமர்ந்து கொண்டு சக மாணவனை பார்த்து கண்ணடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த காட்சிக்கு ஒரே நாளில் 30 லட்சம் லைக்குகள் கிடைத்தது.

மேலும் பள்ளியில் நிறைய மாணவ-மாணவிகள் இருக்கும் போது பிரியா வாரியார் மாணவர் ஒருவருக்கு பறக்கும் முத்தம் கொடுக்கும் காட்சியும் சமூக வலை தளங்களில் பரவியது.

பிரியா வாரியார் போல் பலர் கண்ணடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை, கோவைப் புதூரில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியில் நடிகை பிரியா வாரியார் போல் மாணவிகள் யாராவது கண்ணடித்தால் ஒரு வருடம் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவி வருகிறது.



அதில், நடிகை பிரியா வாரியார் போல் மாணவிகள் கண்ணடிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வகுப்பறையில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளது. யாராவது பிரியா வாரியார் போல் கண்ணடித்தால் ஒரு வருடம் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. நாங்கள் அப்படி எந்த சுற்றறிக்கையும் வெளியிடவில்லை என தெரிவித்து இருக்கிறது. மர்ம நபர் யாரோ எங்கள் கல்லூரி லெட்டர் பேடை பயன்படுத்தி போலியாக இந்த சுற்றறிக்கையை வெளியிட்டு உள்ளனர் என நிர்வாகம் கூறி உள்ளது.

இது தொடர்பாக போலீசிலும் புகார் தெரிவித்து உள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது கூறியதாவது-

இங்கு கேரளாவை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். கல்லூரியில் ஒழுக்கத்தை கடைபிடித்து வருகிறோம். ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த 2017-ம் ஆண்டு குளிர்பானம் தொடர்பாக பிரச்சினை வந்த போது எங்கள் கல்லூரி பெயரில் இப்படி போலியாக சுற்றறிக்கை விடப்பட்டு இருந்தது. அதன் பிறகு எந்த பிரச்சினை வந்தாலும் எங்கள் கல்லூரி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி இவ்வாறு வலை தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

இந்த சுற்றறிக்கையில் கல்லூரி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்து இருக்கிறோம்.

இவ்வாறு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #tamilnews
Tags:    

Similar News