செய்திகள்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி அளித்த போது எடுத்த படம்.

நடிகர்கள் வரவால் அரசியல் கட்சிகளின் வாக்குகள் சிதறும் - கே.பாலகிருஷ்ணன்

Published On 2018-02-22 04:09 GMT   |   Update On 2018-02-22 04:09 GMT
நடிகர்கள் வரவால் தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு உள்ள வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர்:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

திருவாரூர் வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதி நீர் பிரச்சினையில் அனைத்து கட்சி ஒன்றிணைந்து குரல் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மக்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை எதிர்க்கிறோம்.

கோடை காலத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் வாய்க்கால், வடிகால் நீர் நிலைகளை தூர்வாரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளிலும், உரிமைகளிலும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமானது.



தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களை ஏற்று கொள்வது என்பதை தமிழக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நடிகர்கள் வரவால் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு உள்ள வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது. அதே போல புதிய தலைமுறைகள் ஆதரவு யாருக்கு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கர்நாடக அரசு சீராய்வு மனு அளிக்க போவதாக தெரிவித்திருப்பது மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் நடவடிக்கையாக உள்ளது. எனவே இதனை கோர்ட்டு அனுமதிக்க கூடாது.

நடிகர் கமல் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. கட்சி ஆரம்பித்த உடனே முதல்-அமைச்சராக வேண்டும் என நினைக்கக்கூடாது. அவர் மக்களை பற்றி கவலைப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Tags:    

Similar News