செய்திகள்

ஆந்திராவில் இறந்த 5 தமிழர்களின் உடல் சொந்த ஊர் வந்தடைந்தது

Published On 2018-02-20 23:16 GMT   |   Update On 2018-02-20 23:16 GMT
ஆந்திர மாநிலம் கடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் சொந்த ஊரான சேலம் மாவட்டம் கருமந்துறையை இன்று அதிகாலை வந்தடைந்தது.
சேலம்:

ஆந்திர மாநிலம் கடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் சொந்த ஊரான சேலம் மாவட்டம் கருமந்துறையை இன்று அதிகாலை வந்தடைந்தது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா வனப்பகுதியில் பழமையான ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரில் வனப்பகுதியை ஒட்டி பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் 5 பேர் இறந்து கிடந்தனர். 5 பேரின் உடல்களிலும் ரத்தக் காயங்கள் இருந்தன.



ஏரிக்கு அருகே கிடந்த பைகளில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை பகுதி முகவரி இருந்ததால் அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். பைகளில் இருந்த முகவரி விவரம், செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தியதில் இறந்தவர்கள் 5 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த அடியனூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன், கீழ் ஆவரை கிராமத்தை சேர்ந்த கருப்பண்ணன், கருமந்துறையை சேர்ந்த ஜெயராஜ், முருகேசன், சின்னபையன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பிணமாக கிடந்த 5 பேரும் செம்மரம் வெட்ட வந்த கூலி தொழிலாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரியில் இருந்து 5 பேரின் உடல்களையும் மீட்ட ஆந்திர போலீசார், பிரேத பரிசோதனைக்காக கடப்பா ரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் வைத்தனர். இறந்தவர்களின் உறவினர்கள் வந்து அடையாளம் காண்பித்த பிறகே பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர்.

ஆனால், இறந்தவர்களின் உறவினர்கள் கடப்பாவுக்கு வந்து சேருவதற்குள், 5 உடல்களையும் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து முடித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக கியூ பிரிவு போலீசார் ஆந்திராவுக்கு செல்கின்றனர்.
இதற்கிடையே, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 5 உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே ஆந்திராவில் இறந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 3 லட்சம் நிதி உதவியும், சம்பவம் குறித்தும் முழு விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் சொந்த ஊரான சேலம் மாவட்டம் கருமந்துறையை இன்று அதிகாலை வந்தடைந்தது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஆந்திரா மாநிலத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 5 பேரின் உடல்களும் ஆம்புலன்சில் ஏற்றி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆம்புலன்சில் ஏற்றி வைக்கப்பட்ட 5 பேரின் உடல்களும் இன்று அதிகாலை அவர்களது சொந்த ஊரான சேலம் கருமந்துறையை அடுத்த அடியனூர், கெரங்காட்டுக்கு வந்தடைந்தது. #tamilnews 
Tags:    

Similar News