செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினை: கர்நாடக முதல்-மந்திரிக்கு நாராயணசாமி எதிர்ப்பு

Published On 2018-02-18 08:41 GMT   |   Update On 2018-02-18 08:41 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அந்த நீரை முறையாக புதுவைக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரிக்கு நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பாப்ஸ்கோ போராட்டத்தில் பேசிய பா.ஜனதா தலைவர் சாமிநாதன் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. பற்றி தரக்குறைவாக பேசி இருக்கிறார்.

அவரை பற்றி மட்டும் அல்லாமல் மற்ற எம்.எல்.ஏ.க்களையும், என்னையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

அவர் என்ன பேசினார்? என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். ஒரு மாநில கட்சி தலைவருக்கான தகுதி சாமிநாதனுக்கு இல்லை. ஒரு கட்சி தலைவர் என்றால் கொள்கையை பற்றி பேசலாம். அப்படி பேசினால் அவருக்கு ஒரு உரிய பதிலடி கொடுப்போம்.

ஆனால், அதை விட்டு விட்டு தனிப்பட்ட முறையில் பெண் எம்.எல்.ஏ.வையும், எங்களையும் விமர்சித்து இருக்கிறார். அவருடைய செயல்பாடு கீழ்த்தரமாக அமைந்துள்ளது.

அவர் இவ்வாறு மோசமாக பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் இப்படி நடந்து கொள்வது அரசியல் நாகரீகத்துக்கு உகந்தது அல்ல.

ஏ.கே.டி. ஆறுமுகம் தொடர்பான காங்கிரஸ் பிரச்சினை எங்கள் கட்சி சம்பந்தப்பட்டது. இது ஒரு குடும்ப பிரச்சினை போன்றது. எங்கள் குடும்ப பிரச்சினையை நாங்களே பேசி தீர்த்து கொள்வோம்.

பிரதமர் வருகை தேதி மாற்றம் குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் வரவில்லை. 24-ந் தேதி வருவதாகத்தான் இதுவரை எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதே போல் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றியும் எங்களுக்கு தகவல் இல்லை.

காவிரியில் புதுவையின் பங்காக இதுவரை 6 டி.எம்.சி. தண்ணீர் தான் வந்து கொண்டு இருந்தது. இப்போது 7 டி.எம்.சி. தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது, புதுவைக்கு சாதகமானது என்பதால் அந்த தீர்ப்பை வரவேற்று இருக்கிறோம்.

அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அந்த நீரை முறையாக புதுவைக்கு கிடைக்க செய்ய வேண்டும். காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா சொல்வது தவறில்லை.

அவர் காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரியாக இருந்தாலும் அவரது கருத்தை நாங்கள் எதிர்க்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும்.

புதுவையில் இருந்து பெங்களூருக்கு இப்போது விமானம் விடப்பட்டுள்ளது. அடுத்து கோவை, திருப்பதி, கொச்சி நகரங்களுக்கும் விமானம் விட ஏற்பாடு நடந்து வருகிறது.

போலீஸ் சூப்பிரண்டு பதவி உயர்வு வழங்குவதற்கு உரிய எற்பாடுகள் நடந்து வருகின்றன. போலீசாருக்கு வழங்கப்படும் கூடுதல் ஒரு மாத சம்பளம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நடந்த முறைகேடு அரசுக்கு தெரியாமல் நடந்திருக்காது. இது இந்திய வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழல். இது சம்பந்தமாக மத்திய அரசு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

பாப்ஸ்கோ நிறுவனத்தை லாபத்தில் இயக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Tags:    

Similar News