செய்திகள்

புதுவையில் டெம்போ கட்டணம் 15-ந் தேதி முதல் உயருகிறது

Published On 2018-02-13 05:05 GMT   |   Update On 2018-02-13 05:05 GMT
வருகிற 15-ந் தேதி முதல் டெம்போ கட்டணத்தை உயர்த்துவதாக டெம்போ உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கட்டண உயர்வு குறித்து அனைத்து டெம்போக்களிலும் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை நகர பகுதியில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி, முத்தியால்பேட்டை, ராஜா, கதிர்காமம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு டெம்போக்கள் இயக்கப்படுகிறது.

இவற்றில் டவுன் பஸ் கட்டணம் போல ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். அரசு அனுமதியுடன் இந்த டெம்போக்கள் இயக்கப்படுகின்றன.

புதுவையை பொறுத்தவரை உள்ளூர் பயணத்துக்கு அதிக அளவில் பொதுமக்கள் டெம்போக்களையே பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதனை தொடர்ந்து புதுவையிலும் பஸ் கட்டணம் உயர்ந்தது. மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தப்படி பஸ் கட்டணம் உயர்ந்ததாக அரசு தெரிவித்தது.

ஆனாலும், தனியார் பஸ் உரிமையாளர்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக கூறி அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி முதல் டெம்போ கட்டணத்தை உயர்த்துவதாக விக்ரம் டெம்போ உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கட்டண உயர்வு குறித்து அனைத்து டெம்போக்களிலும் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

நீங்கள் பயணம் செய்யும் 3 சக்கர விக்ரம் டெம்போவின் உதிரிபாகங்கள், இன்சூரன்ஸ், சாலை வரி, ஆர்.டி.ஓ. சம் பந்தமான கட்டணங்கள் மற்றும் டீசல் விலை கடந்த 5 ஆண்டில் பன்மடங்கு உயர்ந்து விட்டது.

இதனை எங்களால் சமாளிக்க முடியாத நிலை வந்து விட்டது. இதனால் வேறு வழியின்றி வருகிற 15-ந் தேதி வியாழக்கிழமை முதல் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்படுகிறது. பயணிகள் தொடர்ந்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பஸ் கட்டணத்தை தொடர்ந்து டெம்போ கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது புதுவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News