செய்திகள்

ரஜினி ஆன்மீக அரசியலை தொடங்கினாலும் வெற்றி பெற முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2018-01-20 10:54 GMT   |   Update On 2018-01-20 10:54 GMT
ரஜினி ஆன்மீக அரசியலை தொடங்கினாலும், தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி 2-வது குடிநீர் திட்டம் குறித்து கோவில்பட்டியில் அதிகாரிகளுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவில்பட்டி நகரின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க, நீண்ட நாள் கனவு திட்டமான 2-வது குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து, வெள்ளோட்டமும் நடைபெற்றுள்ளது. அதன் இறுதி கட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அடுத்த மாதம் 25-ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக இத்திட்டத்தினை அர்பணித்து வைக்கவுள்ளார்.

ரஜினி ஆன்மீக அரசியலை தொடங்கினாலும், தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. ஏனென்றால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகமும், திராவிடமும் கலந்த அண்ணா தி.மு.க. ஆட்சியை நடத்தி மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையில் ஜெயலலிதா ஆட்சி நடத்தியதால் அவரை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

இதனால் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை பின்பற்றித்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது அ.தி.மு.க. ஆட்சியை சிறப்புடன் நடத்தி வருகிறார்.

தி.மு.க. எப்போதும் இந்துக்களையும், இந்து மத சாமியார்களையும் அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க.விற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தினகரன் புதிய கட்சி ஆரம்பித்தால் அவர் பின்னால் யார் செல்வார்கள் என்று கேட்கிறீர்கள். இந்த கேள்விக்கு உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #Tamilnews
Tags:    

Similar News