செய்திகள்

கவர்னர் கிரண்பேடி தன்னாட்சி செய்கிறார் அ.தி.மு.க. குற்றச்சாட்டு

Published On 2018-01-15 10:29 GMT   |   Update On 2018-01-15 10:29 GMT
புதுவை கவர்னர் கிரண்பேடி மக்கள் ஆட்சியின் தத்துவத்தை கேள்விக்குறியாக்கி தன்னாட்சி செய்து வருகிறார் என்று அம்மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன் கூறி உள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை கவர்னர் கிரண்பேடி பாராட்டுக்குரியவர் அல்ல. மக்கள் ஆட்சியின் தத்துவத்தை கேள்விக்குறியாக்கி தன்னாட்சி செய்து வருகிறார். மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களை அணை போட்டு தடுப்பதும், இறுதிவரை முடியாமல் போனால் வேறு வழியின்றி அணையை திறப்பதும், கவர்னரின் வாடிக்கையாக உள்ளது. மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சி மாநில கவர்னர்களை முடுக்கி விட்டு மாநில உரிமைகளை பறித்துக் கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சியான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி நடப்பதால் அங்குள்ள கவர்னர் பன்வாரிலாலின் தனி ஆவர்த்தனம் எடுபடவில்லை. ஆனால் புதுவையில் காங்கிரஸ், தி.மு.க.வின் தலைமையிலான மக்கள் விரோத ஆட்சி நடப்பதால் கவர்னர் கிரண்பேடி தனி ஆவர்த்தனம் தலைதூக்கியுள்ளது. காங்கிரஸ் தி.மு.க. ஆட்சிக்கு கவர்னர் அஞ்சவுமில்லை. அசரவுமில்லை.

எதையும் இடித்துரைப்பதும் எடுத்துரைப்பதும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தான். ஆளும் காங்கிரஸ்-தி.மு.க. கட்சி யாளும், கவர்னர் கிரண் பேடியானாலும் அவ்வப்போது ஏற்படும் மக்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவ மக்களின் பிரச்சி னைகள், போராடிப் பெற்று தருவதில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முதன்மையாக உள்ளனர்.

எனவே சிறந்த முறையில் செயல்படும் அ.தி.மு.க. உறுப்பினர்களை வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழா கூட்டத்தில் பரிசு வழங்கி பாராட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #tamilnews

Tags:    

Similar News