செய்திகள்

பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காத ரஜினி, அரசியல் சிம்மாசனத்துக்கு ஆசைப்படுகிறார்: வேல்முருகன்

Published On 2018-01-13 10:07 GMT   |   Update On 2018-01-13 10:07 GMT
தமிழர்களின் எந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்காத ரஜினிகாந்த் அரசியல் சிம்மாசனத்துக்கு ஆசைப்படுகிறார். இது ஒருபோதும் நடைபெறாது என்று வேல்முருகன் கூறினார்.

விழுப்புரம்:

தமிழக வாழ்வுரிமை கட்சியின் விழுப்புரம் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இடைத்தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தினால் தடுக்க முடியவில்லை. ஆனால் வளர்ந்துவரும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி போட்டு வருகிறது. மாற்றத்திற்கான அரசியலை முன்வைத்துதான் நாங்கள் கட்சி நடத்தி வருகிறோம். பதவிக்காக கட்சி நடத்தவில்லை. கொள்கைக்காக மட்டுமே நடத்தி வருகிறோம்.

தமிழகத்தில் அரசுப்பணிகள் பணத்திற்கு ஏலம் விடப்படுகிறது. ஆசிரியர் தேர்வில் ரூ.30 லட்சம் வரை பணம் பெறப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம் நடத்தியபின் விசாரணை நடந்தது. உலகம் முழுவதும் தமிழனுக்கு ஏதேனும் ஒரு பிரச்சினை என்றால் முதலில் போராட்ட களத்தில் குதிக்கும் கட்சி எங்கள் கட்சிதான்.

சுங்கச்சாவடி கட்டணத்தை கண்டித்தும், அதனை மூடக்கோரி கடந்த 6 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். சொந்தமாக கார் வாங்கி அனைத்து வரிகளையும் செலுத்திய பின் சுங்கச்சாவடிகளில் கட்டணம் கேட்கின்றனர். கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் சுங்கச்சாவடிகள் முன்பு விரைவில் போராட்டம் நடத்துவோம்.


கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல், மீனவர்கள் கைது போன்ற தமிழர்களின் எந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்காத ரஜினிகாந்த் அரசியல் சிம்மாசனத்துக்கு ஆசைப்படுகிறார். இது ஒருபோதும் நடைபெறாது.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews #rajinikanth 

Tags:    

Similar News