செய்திகள்

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் மாயமான 57 மீனவர்கள் இன்று கரை திரும்பினர்

Published On 2017-12-21 05:17 GMT   |   Update On 2017-12-21 05:17 GMT
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் மாயமான 57 மீனவர்கள் இன்று கரை திரும்பினர். மாயமான மீனவர்களில் 156 பேரின் கதி என்னவென்பது இதுவரை தெரியவில்லை.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் சிக்கி ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள்.

மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் மத்திய, மாநில அரசுகளுடன் உள்ளூர் மீனவர்களும், தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக கடற்கரை மட்டுமின்றி கேரள கடற்பரப்பிலும் படகுகளில் சென்று மாயமான மீனவர்களை தேடி வருகிறார்கள்.

இதில் கொச்சி கடல் பகுதியில் வள்ளவிளையைச் சேர்ந்த 10 மீனவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக கொச்சி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்தவர்களின் 4 விசைப்படகுகளில் 47 மீனவர்கள் தவிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் கொச்சி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களையும் சேர்த்து 57 குமரி மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் இருந்து மாயமான மீனவர்களில் 156 பேரின் கதி என்னவென்பது இதுவரை தெரியவில்லை. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்புக்கு முன்பு அவர்கள் வந்து விடுவார்கள் என மீனவர்களின் உறவினர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இதுபோல இன்னும் 380 பேர் கரை திரும்ப வேண்டும் எனவும் மீனவ அமைப்புகள் கூறி உள்ளனர்.

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறியதாவது:-

கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் மாயமான மீனவர்களை உள்ளூர் மீனவர்களே மீட்டு வருகிறார்கள். கடலில் தவிப்பவர்களில் 156 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சுகிறோம். நீரோடி, சின்னத்துறை, பூத்துறை, மார்த்தாண்டம் துறை, இரவி புத்தன்துறை, தூத்தூர், வள்ளவிளை, இரயுமன்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களிலிருந்து மீனவர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நெய்தல் மக்கள் இயக்க தலைவர் குறும்பனை பெர்லின் கூறும்போது, 380 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களை கண்டுபிடிக்க ஆழ்கடல் தேடுதலை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

இதற்கிடையே கேரளாவில் மேலும் 2 மீனவர் பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில், ஒரு பிணம் அன்ட்ரோத் பகுதியிலும், இன்னொரு பிணம் காசர் கோடு பகுதியிலும் மீட்கப்பட்டுள்ளது.

இவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. இவர்களையும் சேர்த்தால் இதுவரை கேரளாவில் 73 மீனவர்கள் பலியாகி உள்ளனர். இன்னும் பல மீனவர்கள் அங்கும் கரை திரும்ப வேண்டும். அவர்களை கோவா மாநில கடல் பரப்பிலும் தேட கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிடையே குமரி மாவட்ட மீனவர்களை மீட்கும் பணியில் கேரள அரசும், அங்குள்ள மீனவர்களும் துணை புரிந்து வருகிறார்கள். மீட்கப்படும் பல மீனவர்கள் கொச்சி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கு நன்றி தெரிவிக்க குமரி மீனவ பிரதிநிதிகள் திருவனந்தபுரம் சென்று கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் மாயமான குமரி மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து உதவி செய்யும் படியும் கேட்டுக் கொண்டனர். 


Tags:    

Similar News