செய்திகள்

திண்டுக்கல் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய கணவன்-மனைவி

Published On 2017-12-17 11:05 GMT   |   Update On 2017-12-17 11:05 GMT
திண்டுக்கல் அருகே கணவன்-மனைவி தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள ப.விராலிப்பட்டி அம்பேத்கார் தெரு அரசு பள்ளிக்கூடம் தென்புறம் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 28). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி பிச்சையம்மாள் (22). இவர்களுக்கு 2½ வயதில் சுவாதி என்ற பெண் குழந்தையும், வாசு என்ற 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலமுருகன் திருப்பூரில் இருந்து ஊருக்கு வந்தார். அவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இன்று காலை வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்த நிலையில் குழந்தைகள் இருவரும் அழுது கொண்டு இருந்தனர். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அருகில் உள்ள பாலமுருகனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கதவு திறக்கப்படாததால் ஓட்டைப்பிரித்து உள்ளே இறங்கிய போது கணவன்-மனைவி 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பெற்றோர்களை இழந்த 2 கைக்குழந்தைகளும் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்பவர் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

Tags:    

Similar News