செய்திகள்

மாமல்லபுரம் அருகே வாகன விபத்தில் 3 பேர் பலியானது பற்றி கவர்னர் மாளிகை விளக்கம்

Published On 2017-12-16 03:28 GMT   |   Update On 2017-12-16 03:28 GMT
மாமல்லபுரம் அருகே வாகன விபத்தில் 3 பேர் பலியானது பற்றி கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை:

தமிழக கவர்னரின் மாளிகையான ராஜ்பவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடலூரில் இருந்து 15-ந் தேதி (நேற்று) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்ட கவர்னரின் பாதுகாப்பு வாகனம் (கான்வாய்) சென்னை ராஜ்பவனை மாலை 4.20 மணிக்கு வந்தடைந்தது. கடலூரில் இருந்து சென்னை வரை எந்தவொரு அசம்பாவிதமோ அல்லது விபத்தோ ஏற்படவில்லை.

இந்த நிலையில் ராஜ்பவனுக்கு காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு தகவல் அனுப்பியுள்ளார். அதில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் கவர்னரின் கான்வாய் வாகனத்துக்கு முன்பு செல்லும் ‘அட்வான்ஸ் பைலட்’ வாகனமாக பொலிரோ ஜீப் பயன்படுத்தப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்ட எல்லையை கான்வாய் கடந்த பிறகு, பைலட் வாகனம் அங்கிருந்து காஞ்சீபுரத்துக்கு திரும்பி வந்தது.

10 கி.மீ. தூரம் கடந்து வந்த நிலையில் சாலை விபத்தில் பைலட் வாகனம் சிக்கியது. அந்த பைலட் வாகனம், கவர்னரின் கான்வாயில் இருந்தபோது எந்த விபத்திலும் சிக்கவில்லை. கான்வாயை விட்டு தனியாக திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் விபத்து நேரிட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த தகவலை பத்திரிகையாளர்களிடம் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏற்கனவே கூறியிருக்கிறார். எனவே கவர்னர் செல்லும் கான்வாயில் உள்ள எந்த வாகனமும் எந்தவித அசம்பாவிதத்துக்கு ஆட்படவில்லை. எனவே கான்வாய் வாகனத்தால் விபத்து ஏற்பட்டதாக வந்துள்ள தகவல்கள் தவறானவை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News