செய்திகள்

ஹூக்கா விற்பனைக்கு அனுமதி வழங்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-12-15 02:53 GMT   |   Update On 2017-12-15 02:53 GMT
உடலுக்கு அதிக தீங்கை தரக்கூடிய ‘ஹூக்காவை’ சென்னையில் விற்பனை அனுமதி வழங்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ‘ட்ரிஜில் ரெஸ்டாரண்ட்’ என்ற தனியார் உணவு விடுதி ஒன்று உள்ளது. இந்த உணவு விடுதி நிர்வாகம், ‘ஹூக்கா’ (குடுவை புகைப்பான்) விற்பனைக்கு அனுமதி வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது மாநகராட்சி நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘உடல் நலனுக்கு தீங்கு விளைக்கும் ஹூக்கா பார்லர்களுக்கு சென்னை மாநகராட்சி பகுதியில் சட்டரீதியாகவே அனுமதி கிடையாது’ என்று கூறப்பட்டிருந்தது.

அதேபோல, இந்த வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனர் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘உண்மையில் ‘சிகரெட்டை’ விட ‘ஹூக்கா’ எனும் குடுவை புகைப்பான்களில்தான் அதிகளவில் உடலுக்கு தீங்கு செய்யும் நிக்கோட்டின் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.



சிகரெட் மூலமாக 500 முதல் 600 மில்லியன் லிட்டர் புகை சுவாசிக்கப்படுகிறது என்றால், இந்த ஹூக்காக்களின் மூலமாக 90 ஆயிரம் மில்லியன் லிட்டர் புகை சுவாசிக்கப்படுகிறது. இதனால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, ஹூக்காவுக்கு அனுமதி வழங்க முடியாது என்ற மாநகராட்சி முடிவை ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

Similar News