செய்திகள்

மருத்துவ கல்லூரி மாணவியுடன் தூக்கில் தொங்கிய காதலன் பலி

Published On 2017-12-13 08:16 GMT   |   Update On 2017-12-13 08:16 GMT
வேலூர் அடுக்கம்பாறையில் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கல்லூரி மாணவியுடன் காதலன் தூக்கில் தொங்கினார். இதில் காதலன் பலியான நிலையில் மாணவி உயிர் பிழைத்தார்.
வேலூர்:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வசந்த நகரை சேர்ந்த தஞ்சியப்பன் மகன் கார்த்திகேயன் (27) என்ஜினீயரிங் படித்த இவர் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

இதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரியில் 4- ம் ஆண்டு படித்து வருகிறார்.

ஒரே தெருவில் வசித்த இவர்கள் அடிக்கடி பார்த்து கொண்டதால் காதல் மலர்ந்தது. கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

கார்த்திகேயன் பெண் கேட்டும், மாணவியின் பெற்றோர் பெண் தர மறுத்தனர்.

இந்த நிலையில் மாணவியை பார்க்க கார்த்திகேயன் நேற்று வேலூர் வந்தார். அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி எதிரே உள்ள ஓட்டல் மாடியில் உள்ள அறையில், கார்த்திகேயன் மாணவியுடன் நேற்று மாலை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.

இரவு வரை பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியினர் திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு இருப்பதை எண்ணி மனமுடைந்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த கார்த்திகேயன் கழிவறையில் தூக்கில் தொங்கினார். இதனைக்கண்ட மாணவி அறையில் உள்ள பேனில் தூக்கிலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அப்போது, மருத்துவ மாணவியும், வாலிபரும் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர்.

இதில் மாணவி மட்டும் காப்பாற்றப்பட்ட நிலையில் காதலன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாலிபர் இறந்து கிடந்த கட்டிடத்தை போலீசார் பூட்டினர். இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News