செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்.

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 50 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்

Published On 2017-11-24 10:05 GMT   |   Update On 2017-11-24 10:06 GMT
மண்டபம் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர். அவை இலங்கைக்கு கடத்த பதுக்கப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.
ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க கடலோர போலீசாரும், சுங்க இலாகாவினரும் தீவிர கண்காணிப்பு பணி செய்து வருகின்றனர்.

இதே போல் இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் மற்றும் திருட்டுத்தனமாக வரும் அகதிகள் போன்றவர்களை கியூ பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் அருகே உள்ள முயல் தீவு பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் சுங்க இலாகாவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுங்க இலாகா கண்காணிப்பாளர்கள் ராஜ்குமார், மோசஸ், முனியசாமி தலைமையில் ஒரு குழு அங்கு விரைந்தது.

அந்தக்குழு முயல் தீவு பகுதியில் தீவிர சோதனை நடத்தியது. அப்போது ஒரு இடத்தில் செம்மரக் கட்டைகள் கேட்பாரற்ற நிலையில் கிடந்தன.

அதனை கவனித்த சுங்க இலாகாவினர், அங்கு கிடந்த 30 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 50 லட்சம் என கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள், ராமநாதபுரம் சுங்க இலாகா அலுவலகம் கொண்டுவரப்பட்டது.

செம்மரக்கட்டைகள் பதுக்கியது யார்? அதனை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.



Tags:    

Similar News