செய்திகள்

குமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை: 50 வீடுகளில் மின் சாதனங்கள் சேதம்

Published On 2017-11-21 05:34 GMT   |   Update On 2017-11-21 05:34 GMT
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், குமரி மாவட்டத்தில் நள்ளிரவு இடி, மின்னலுடன் இரண்டு மணி நேரம் பலத்த மழை கொட்டியதால் நகரமெங்கும் வெள்ளக்காடானது.
நாகர்கோவில்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாகவும் இதனால் தென்மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதற்கேற்ப நேற்று மாலை முதல் குமரி மாவட்டம் முழுவதும் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. மாலை 4 மணியளவில் கன்னியாகுமரி, கொட்டாரம், சாமித்தோப்பு, தாமரைகுளம் பகுதிகளில் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை, 5 மணியளவில் நாகர்கோவில், இடலாக்குடி, கோட்டார், செட்டிக்குளம், ராமன்புதூர், புன்னை நகர், கோணம் என நகரின் அனைத்து பகுதிகளிலும் பெய்தது.

அதன் பிறகு மழை சற்று ஓய்ந்தாலும், பல இடங்களிலும் சாரல் மழை பெய்தபடி இருந்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

விடிய விடிய பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போக்குவரத்தும் தடைபட்டது.

இந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடி- மின்னல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் நகரமெங்கும் வெள்ளக்காடானது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

மின்கம்பங்களும் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிந்தது. உயர் அழுத்த மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. இடலாக் குடி, பறக்கையில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.

மரத்தின் கிளைகள் விழுந்ததில் மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த பல வீடுகளில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் இருளப்பபுரம், பார்க் ரோட்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மிக்சி, கிரைண்டர், வாஷிங்மெஷின் மற்றும் டெலிவி‌ஷன் பெட்டிகள் சேதமடைந்தது. சில இடங்களில் மின்வயர்கள் தீப்பிடித்து எரிந்தது.


இடி-மின்னல் தாக்கியதில் ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்த பொருட்கள்.

பறக்கை பகுதியிலும் சில வீடுகளில் மின்வயர்கள் எரிந்து தீ பிடித்தது. பூட்டிய வீட்டிலும் தீ எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மேலும் முறிந்து விழுந்த மரங்களையும் அப்புறப்படுத்தினர். மின்வாரிய ஊழியர்களும் அறுந்து கிடந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் நேற்றிரவு முதல் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் இன்று காலையும் பல இடங்களில் மழை பெய்தபடி இருந்தது. இன்று காலை 8 மணி வரை மழை பெய்ததில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 82 மி.மீ. மழை பெய்திருந்தது.
Tags:    

Similar News