செய்திகள்

கவர்னர் தொடர்ந்து ஆய்வு செய்தால் அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம்: தமிமுன் அன்சாரி

Published On 2017-11-19 14:50 GMT   |   Update On 2017-11-19 14:50 GMT
மாநில அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையீடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.கூறினார்.

நெல்லை:

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாச்சாரம், ஜனநாயகத்தை சிதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். அவரது பண மதிப்பிழக்க நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது. ஜி.எஸ்.டி.விசயத்தில் அவர்கள் சரியாக செயல்படவில்லை.

குஜராத் தேர்தலை மனதில் வைத்து தற்போது சில பொருட்களுக்கு வரியை குறைத்துள்ளனர். குஜராத் தேர்தலில் பா.ஜ.க. வினர் நிச்சயம் தோல்வி அடைவார்கள். இது அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

மாநில அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏற்கனவே டெல்லியிலும், பாண்டிச்சேரியிலும் கவர்னர்கள் மூலமாக இரட்டை தலைமை முறையை கொண்டு வந்த பா.ஜ.க.அரசு தமிழகத்திலும் பின்பற்றுகிறது. மத்தியஅரசு மாநில அரசுகளின் உரிமையை பறிக்க கவர்னர்களை பகடைகாய்களாக பயன் படுத்துகிறது.

கவர்னர் எல்லா மாவட்டங்களிலும் சென்று ஆய்வு நடத்தினால், நாங்கள் மாநில சுயாட்சி கொள்கையை எடுத்து ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியதின் மூலம் அவரது புகழை கெடுக்கும் விதத்தில் அரசு ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க.வை அழிக்கும் நடவடிக்கையாகவே இதை பார்க்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை மதவாத சக்திகளை தடுக்கும் வலிமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது.

அ.தி.மு.க.வில் வலிமையான தலைமை இருக்கக்கூடாது என்பதற்காகவே இதை கருதுகிறோம். தினகரன் வலிமையான தலைவராக உருவாகுவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே தினகரன், எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. இணைந்து கட்சியை நடத்த வேண்டும்.

பாளை மத்தியசிறையில் கைதிகளுக்குள்ள உரிமைகள் மறுக்கப்படுகிறது. அங்கு மனித உரிமை மீறல்கள் நடப்பதாக தெரிகிறது. இதுபற்றி அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து முறையிட உள்ளோம்.

நெல்லை மாநகராட்சியில் பொதுமக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூத்த தலைவர் என்ற முறையில் தான் கலைஞரை சந்தித்தோம். இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை. தமிழகத்தில் சில அமைச்சர்களின் பேச்சு 23-ம் புலிகேசி படத்தில் வருவது போல் தெரிகிறது. இதை அ.தி.மு.க. தொண்டர்களே விரும்ப மாட்டார்கள். எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மாநில அரசுகளின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் செயல் பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News