செய்திகள்

ஜெயலலிதா இல்லத்தில் சோதனை நடத்தியது வருத்தம் அளிக்கிறது: சரத்குமார்

Published On 2017-11-18 08:07 GMT   |   Update On 2017-11-18 08:07 GMT
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது வருத்தம் அளிக்கிறது என சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை:

சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது உரிமையிருந்தாலும், தவிர்த்திருக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ற வகையில் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து முடித்த பிறகும், எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் இறந்த பிறகும், அவரது வீட்டில் சோதனை நடவடிக்கை என்பது, இந்திய அரசியல் வரலாற்றில் இது வரை இல்லாத நடைமுறை.

வருமான வரித்துறையினருக்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறது, சோதனை நடத்துவதற்கு தக்க காரணமும் இருக்கிறது. ஒரு சாதாரண மனிதன் இறந்த பிறகு அவரை பேச்சளவில் கூட இகழ மறுக்கும் சமூகத்தில், மாபெரும் தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்பட்ட ஜெயலலிதா இறந்து, முதலாமாண்டு நினைவு தினம் நெருங்கும் நேரத்தில், அவருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்ட செயலாகவே இந்த நள்ளிரவுச் சோதனை நடவடிக்கையைப் பார்க்கிறேன்.

கட்சி சார்ந்த தொண்டர்கள் மட்டுமல்லாது, மறைந்த ஜெயலலிதாவை வெகுவாக நேசித்த தமிழக மக்களையும் இந்த நடவடிக்கை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒரு அரசியல் கட்சியின் சார்பாகவோ, அதன் அணிகளுள் ஒன்றின் சார்பாகவோ இக்கருத்தை நான் கூறவில்லை. இது நிச்சயம் தொண்டர்களிடமும், அவரை அன்போடு நேசித்த தமிழக மக்களிடமும், சிந்தையில் ஓடிக்கொண்டிருக்கும் வேதனை கலந்த எண்ணங்களின் வெளிப்பாடாகவே இருக்கும் என்ற அடிப்படையில், என் வருத்தத்தை வெளிப்படுத்துகிறேன். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் என யாரும் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்காதது வருத்தத்தை அளிக்கிறது.

தேசிய அளவில் மிகப் பெரிய புகழையும் பெருமையும் பெற்று, நீண்ட காலம் பொது வாழ்விலும், முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருந்த தமிழக மாநிலத்தின் முதல்வராகவும் பணியாற்றிய தலைவர், பெரும்பான்மையான தமிழக மக்களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்றிருந்த தலைவர்வாழ்ந்த இல்லத்தை இந்த முறையில் சோதனை நடத்தியிருப்பது, அவர் மேல் மதிப்பு கொண்டிருக்கும் மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது, என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News