செய்திகள்

நாமக்கல்லில் சசிகலாவின் வக்கீல் வீட்டில் இன்று 2-வது நாளாக சோதனை

Published On 2017-11-10 05:10 GMT   |   Update On 2017-11-10 05:10 GMT
நாமக்கல்லில் மோகனூர் ரோடு அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள கூட்டுறவு காலனியில் சசிகலாவின் வக்கீல் செந்தில் வீடு உள்ளது. அவரது வீட்டில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

நாமக்கல்:

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அவரது ஆதரவாளர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சிலர் வீடுகளில் மட்டும் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் மோகனூர் ரோடு அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள கூட்டுறவு காலனியில் சசிகலாவின் வக்கீல் செந்தில் வீடு உள்ளது. அவரது வீட்டில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

நேற்று காலை 6-30 மணிக்கு இவரது வீட்டுக்கு வந்த 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்னும் இவரது வீட்டை விட்டு செல்லவில்லை.

இரவு இவரது வீட்டிலேயே தங்கினார்கள். சாப்பாடும் ஓட்டலில் வாங்கி சாப்பிட்டனர். இன்று அவர்கள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள். அவரது வீட்டில் உள்ள பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் காட்டி சரி பார்த்து வருகின்றனர்.

மேலும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணையும் நடத்தி வருகிறார்கள். சோதனையில் முக்கிய ஆவணம் எதுவும் சிக்கியதா என்ற விவரம் தெரிய வில்லை.

வக்கீல் செந்தில் குறுகிய காலத்தில் சசிகலாவின் ஆதரவை பெற்றவர். இவரும் மறைந்த மகாதேவனும் பெங்களூருவில் உள்ள சட்டக்கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் தினகரனின் அறிமுகம் கிடைத்த இவர் நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

பின்னர் வக்கீலும். எம்.பியுமன நவநீத கிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்தார். அப்போது அ.தி.மு.க.வில் பலரிடம் நெருங்கிப்பழகினார். அதன் பிறகு சசிகலாவிடம் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வாதாடிய வக்கீல் குழுவில் செந்திலும் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வக்கீல் செந்திலின் ஜூனியர் வக்கீலான நாமக்கல் முல்லை நகரை சேர்ந்த பாண்டியன் வீட்டிலும் இன்று 2-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

இதே போல வக்கீல் செந்திலுடன் இணைந்து தொழில் செய்து வரும் மகாலட்சுமி டிரான்ஸ் போர்ட் உரிமையாளருமான சுப்பிரமணியத்தின் வீட்டில் இன்று 2-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

நேற்று நாமக்கல் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள சுப்பிரமணியம் வீடு, முல்லைநகரில் உள்ள அவரது அலுவலகம், பெரமாண்டம் பாளையம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஆகியவற்றிலும் சோதனை நடந்தது.

நாமக்கல் மோகனூர் சாலையில் காந்தி நகரில் உள்ள தமிழ்நாடு அரசு தேர்வாணைய உறுப்பினரும், வக்கீலுமான ஏ.வி.பாலுசாமி வீட்டிலும் இன்று 2-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு உள்ளான ஏ.வி.பாலுசாமி கடந்த 10 ஆண்டுகளாக அரசு வக்கீலாக இருந்தவர்.நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு தலைவராக பணியாற்றி உள்ளார்.

இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் ஆகும். வக்கீல் செந்திலின் சொந்த ஊரும் இந்த ஊர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்க்ல மாவட்டத்தில் மொத்தம் 8 இடங்களில் நேற்று சோதனை நடந்தது. இன்று 4பேர் வீடுகளில் மட்டும் 2-வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள செந்திலின் நண்பரான வக்கீல் பிரகாஷ் அலுவலகத்தில் மட்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடிந்து உள்ளது.

Tags:    

Similar News