செய்திகள்

கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது: 4 பேர் படுகாயம்

Published On 2017-10-22 08:27 GMT   |   Update On 2017-10-22 08:27 GMT
கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 125-வது தெருவை சேர்ந்தவர் பாபு (55). இவர் நேற்று இரவு தனது மனைவி தீபா (45), மகள் ‌ஷர்மிளா (25), மகன் கிஷோர் (22) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பாபுவின் வீட்டில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. கியாஸ் கசிவு காரணமாகவே சிலிண்டர் வெடித்தது தெரிய வந்தது. இதில் வீட்டின் பக்கவாட்டு சுவர்கள், பால் கனி, மாடிப்படி ஆகியவை இடிந்து தூக்கி வீசப்பட்டன.


அப்போது குளிர்சாதன பெட்டியும் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் பாபுவின் வீட்டு ஜன்னல் ஒன்று பறந்து சென்று எதிரில் உள்ள வீட்டில் விழுந்தது. இதில் அந்த வீட்டின் கதவுகள் சேதமானது.

வீடு இடிந்ததில் தூங்கி கொண்டிருந்த பாபு, தீபா, ‌ஷர்மிளா, கிஷோர் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் ஏற்றி 4 பேரும் அவசரம் அவசரமாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


வீடு இடிந்த சத்தத்தால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. இதனால் அக்கம், பக்கத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் அலறியடித்து எழுந்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்த வீட்டு முன்பு கூட்டம் கூடியது. அங்கு பரபரப்பும் நிலவியது. கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News