செய்திகள்

எதிர்ப்பு தெரிவிக்க கிராம மக்கள் திரண்டதால் ஆய்வு செய்யாமல் கவர்னர் பாதியிலேயே திரும்பினார்

Published On 2017-10-21 07:28 GMT   |   Update On 2017-10-21 07:28 GMT
எதிர்ப்பு தெரிவிக்க கிராம மக்கள் திரண்டதால் கவர்னர் கிரண்பேடி ஏம்பலம் பகுதிகளுக்கு செல்லும் முடிவை கைவிட்டு தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு கவர்னர் மாளிகைக்கு திரும்பி விட்டார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னராக கிரண்பேடி பதவி ஏற்றது முதல் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

கவர்னரின் இந்த ஆய்வு பணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தங்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே தொகுதியில் கவர்னர் ஆய்வு பணி மேற்கொள்வதாக குற்றம் சாட்டினர்.

மேலும் கவர்னரின் இந்த ஆய்வு பணிக்கு எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்க கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமியும் கருத்து தெரிவித்தார்.

அதற்கு கவர்னர் கிரண்பேடி எம்.எல்.ஏ.க்களுக்கு தகவல் தெரிவித்தாலும் அவர்கள் வருவதில்லை என்று பதில் தெரிவித்தார். தொடர்ந்து அவர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வு செய்யும் பணியை தொடர்ந்து செய்து வந்தார்.

இதற்கிடையே அமைச்சர்களுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் சமீப காலமாக மோதல் போக்கு முற்றி உள்ளது. மக்களுக்கான நலத்திட்ட பணி கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி கையெழுத்திடாமல் கோப்புகளை திருப்பி அனுப்புகிறார் என்று அமைச்சர்கள் புகார் கூறி வருகிறார்கள்.

மேலும் கவர்னர் கிரண் பேடியை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்ப பெறக்கோரியும் ஜனவரி மாதம் பாராளுமன்றம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அமைச்சர் கந்தசாமி அறிவித்தார். அதற்கு கவர்னர் கிரண்பேடி டெல்லிக்கு செல்வதற்கு முன்பாக தன்னை கவர்னர் மாளிகைக்கு மகனுடன் சந்திக்க வருமாறும், அப்போது பல வித்தியாச காட்சிகளை காட்டுவதாக அமைச்சர் கந்தசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

கவர்னர் கூறிய இந்த கருத்து அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் கவர்னர் கிரண்பேடி கூறிய கருத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே அமைச்சர் கந்தசாமியின் தொகுதியான ஏம்பலம் பகுதியில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது.

மேலும் ஏம்பலம் தொகுதியில் ஆய்வு செய்ய வருவது தொடர்பாக கவர்னர் அலுவலகம் அமைச்சர் கந்தசாமிக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் கவர்னர் கிரண்பேடி மீது கொந்தளிப்பில் இருந்த நிலையில் கவர்னர் ஆய்வு செய்ய வருவது அவர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆய்வு செய்ய வரும்போது கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

இதனை அறிந்த அமைச்சர் கந்தசாமி தனது ஆதரவாளர்களிடமும், தொகுதி மக்களிடமும் கவர்னர் ஆய்வு செய்ய வரும் போது, அவரை தடுக்க வேண்டாம் என்றும், எந்தவித அசம்பாவித சம்பவத்திலும் ஈடுபட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் புகார் வந்ததன் அடிப்படையில் கவர்னர் கிரண்பேடி இன்று காலை முதலாவதாக பாகூர் தொகுதிக்குட்பட்ட கொமந்தான் மேடு அணைக்கட்டை பார்வையிட்டார்.

அப்போது புகார் தெரிவித்த விவசாயிகளிடம் விளக்கம் கேட்டார். அதற்கு விவசாயிகள் அணைக்கட்டு பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் சண்முகசுந்தரம், உதவி பொறியாளர் தாமரை புகழேந்தி, மாவட்ட துணை கலெகடர் உதய குமார், தாசில்தார் கார்த்திகேயன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தர்ராஜன் ஆகியோரிடம் ஜனவரி மாதம் இப்பணியை தொடங்கி முடிக்க வேண்டும் என்று கவர்னர் கேட்டுக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள குளத்தையும் நரம்பை கிராமத்தில் ஐ.ஆர்.பி.என். போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை கவர்னர் பார்வையிட திட்டமிட்டு இருந்தார்.

இதனை அறிந்த பிள்ளையார்குப்பம் பேட் மக்களும், பிள்ளையார் குப்பம் கிராம மக்களும் மற்றும் கிருமாம்பாக்கம் பேட், நரம்பை மீனவ பகுதி மக்கள் அமைச்சர் கந்தசாமியின் வேண்டுகோளை ஏற்காமல் ஆங்காங்கே திரண்டு நலத் திட்டங்கள் கோப்புக்கு கையெழுத்திடாதது குறித்து கவர்னரிடம் கேள்வி எழுப்பவும், கவர்னரை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பும் வகையில் பதாகைகளுடன்நின்று கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதனை கவர்னர் கிரண்பேடி அறிந்ததும் அந்த பகுதிகளுக்கு செல்லும் முடிவை கைவிட்டு தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு கவர்னர் மாளிகைக்கு திரும்பி விட்டார். முன்னதாக அந்த பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News