செய்திகள்

புதுவையில் மதுபானம் விலை ‘திடீர்’ உயர்வு: குடிமகன்கள் அதிர்ச்சி

Published On 2017-10-10 10:39 GMT   |   Update On 2017-10-10 10:39 GMT
புதுவையில் மது பானங்கள் திடீரென விலை உயர்த்தப்பட்டதால் குடிமகன்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:

புதுவை அரசுக்கு அதிக வருமானம் தரக்கூடியதாக மதுபான விற்பனை உள்ளது. மது குடிப்பதற்கு என்றே வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தினந்தோறும் புதுவைக்கு வருகின்றனர்.

குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் மதுபானங்கள் வாங்கி செல்வதால் புதுவை அரசுக்கு கலால் வரியாக ரூ.700 கோடி வருமானம் கிடைக்கிறது.

தற்போது பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. வரி போன்ற மத்திய அர சின் அறிவிப்புகளால் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து மது விற்பனையும் மந்தமானது. இதனால் அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த வருமான இழப்பை ஈடுகட்ட மதுபானம் மூலம் அரசுக்கு வரும் வருவாயை அதிகரிக்கும் வகையில் மதுபானங்கள் மீதான கலால் வரியை உயர்த்தி உள்ளது. அதனால் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி பீர் விலை ரூ.4.50 முதல் ரூ.6 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அது போல் ஒயின் ரகம் ரூ.15 முதல் ரூ.20 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா உள்ளிட்ட மதுபான வகைகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் விலை உயர்வால் குடிமகன்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் தெரியாமல் அவர்கள் மதுபான விற்பனையாளர்களிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் அனைத்து மது கடைகளிலும் நடக்கின்றன.


Tags:    

Similar News