செய்திகள்

பிற கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. ஈடுபடாது: பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2017-10-05 16:27 GMT   |   Update On 2017-10-05 16:27 GMT
எந்த காரணத்தாலும், பிற கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை பாரதிய ஜனதா செய்தது கிடையாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி நகர எல்லையான நாலாட்டின்புத்தூருக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார் அவருக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.(அம்மா அணி) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது போடப்பட்டுள்ள தேச துரோக வழக்கு மாநில அரசால் போடப்பட்டுள்ளது. எந்த காரணத்தாலும், பிற கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை பா.ஜ.க. செய்தது கிடையாது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு தொடர்பு கிடையாது.

இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் மோசமான நிர்வாகத்தை வழங்கிய காரணத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியவில்லை. மக்கள் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி தற்போது கொண்டு வந்துள்ள பா.ஜ.க. ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது.

சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கப்பட்டதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. இதுகுறித்து முழுமையாக தகவல் கிடைத்ததும் கருத்து தெரிவிக்கிறேன். தாஜ்மகாலுக்கு உள்ள மரியாதை என்றுமே நிலைத்திருக்கும்.

சினிமாவுக்கு சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ் சினிமா பாதிக்கப்படாத வகையில், மாநில அரசு வரி விதிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட பா.ஜ.க. செயலாளர் சிவந்தி நாராயணன் தலைமையில் நிர்வாகிகள் பாலு, சீனிவாசராகவன், சீனிவாசன், ராம்கி ஆகியோர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
Tags:    

Similar News