செய்திகள்

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் 122 பேர் அனுமதி

Published On 2017-09-28 07:47 GMT   |   Update On 2017-09-28 07:47 GMT
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் இன்று காலை நிலவரப்படி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 122 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் உள்ளது.

திருவள்ளூர், மணவாள நகர், பள்ளிப்பட்டு, கீழ்நல்லாத்தூர், மேல் நல்லாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணவாள நகரைசேர்ந்த 5 ம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். இதைதொடர்ந்து மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

இருப்பினும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வருகை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இன்று காலை நிலவரப்படி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 122 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 23 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனி அறையில் தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 2 பேர் குழந்தைகள் ஆவர்.

இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். அப்போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் தயாளன், மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News