செய்திகள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

Published On 2017-09-21 11:20 GMT   |   Update On 2017-09-21 11:21 GMT
கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை:

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு அமைப்பின் (ஜாக்டோ- ஜியோ) ஒரு பிரிவினர் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்திலும் பங்கேற்றனர். 7 மாவட்டங்களில் உள் இருப்பு போராட்டமும் நடந்தது.

அரசு ஊழியர் சங்கம், தொடக்கப்பள்ளி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்டவை இதில் கலந்து கொண்டன. அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் சென்னையில் எழிலகத்தில் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் சுமார் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் “நோ ஒர்க் நோ பே” (வேலை செய்யாவிட்டால் சம்பளம் இல்லை) என்ற அடிப்படையில் சம்பளம் வழங்க மாட்டோம் என்றும் எச்சரிக்கப்பட்டது. ஆனாலும் அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என கோரிக்கைகளை முன் வைத்து போராடினார்கள்.

இதற்கிடையில் போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை மீறியும் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தொடங்கியது. ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அதன் கீழ் செயல்படும் துறை தலைவர் மூலமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அதனை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் பங்குபெற்ற ஆசிரியர்களின் சம்பளத்தை பிடிக்க உத்தரவிடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 10 நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது என அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்த நாட்களை சனிக்கிழமைகளில் வேலை செய்து ஈடு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி அறிவுரை வழங்கினார்.

கோரிக்கைகளை முன்வைத்து போராடிய ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த எத்தனை நாட்களாகும் என தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. அக். 13-ம் தேதிக்குள் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News