செய்திகள்

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: 114 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர் மட்டம்

Published On 2017-08-21 10:13 GMT   |   Update On 2017-08-21 10:13 GMT
நீர் பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை.

பாசனத்திற்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த 3 ஆண்டுகளாக மழை இல்லாததால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது தாமதமாகியது. மேலும் ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே நடைபெற்றது.

இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்த ஆண்டும் 3 மாதங்களாகியும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் நாற்றங்கால் அமைத்து நிலங்களை உழுது வைத்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

தற்போது கடந்த சில நாட்களாக பெய்த வரும் மழையின் காரணமாக பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 651 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இன்று அது 1382 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டமும் 114 அடியை எட்டியுள்ளது. 225 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

வைகை அணையின் நீர் மட்டம் 29.04 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 32.80 அடியாக உள்ளது. 23 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பறை அணை நீர் மட்டம் 74.78 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

பெரியாறு 31.2, தேக்கடி 28.2, கூடலூர் 1, சண்முகா நதி அணை 1, மஞ்சளாறு 1, மருதா நதி 14.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இன்றும் கூடலூர் லோயர் கேம்ப், குமுளி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அணையின் நீர் மட்டம் உயர்ந்ததால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
Tags:    

Similar News