செய்திகள்

டெங்கு - வைரஸ் காய்ச்சலுக்கு தமிழகத்தில் 47 பேர் பலி - மதுரை ஐகோர்ட்டில் சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

Published On 2017-08-17 06:35 GMT   |   Update On 2017-08-17 06:35 GMT
கடந்த 8 மாதங்களில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 15 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 32 பேரும் பலியாகி உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை:

மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக கொசு வலை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் வரை (ஆகஸ்டு) டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பூரில் 4 பேர், ஈரோட்டில் 3 பேர், கோவையில் 3 பேர், நெல்லை, திருச்சி, திருப்பூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிக்குன்குனியா காய்ச்சலால் உயிரிழப்பு இல்லை. வைரஸ் மற்றும் பிற காய்ச்சலால் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 840 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 420 நடமாடும் மருந்து வாகனங்கள், 770 நடமாடும் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு மையங்கள் 38-ல் இருந்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

பின்னர் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தமிழகத்தில் 13 ஆயிரம் வகையான கொசுக்கள் உள்ள நிலையில் கொசுக்களை ஒழிப்பது என்பது இயலாத காரியம். ஆனால் அவற்றை கட்டுப்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்.

அதற்கு மனுதாரரின் வக்கீல் கொசுக்களை ஒழிப்பதில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News