செய்திகள்

நடிகர் கமல் வேடிக்கை பார்த்து பேசுவதை விட்டு அரசியல் களத்தில் இறங்கி பேசவேண்டும்: ஆர்.டி.ராமச்சந்திரன்

Published On 2017-08-16 10:41 GMT   |   Update On 2017-08-16 10:41 GMT
நடிகர் கமல்ஹாசன் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்து பேசுவதை விட்டு, அரசியல் களத்தில் இறங்கி பேசவேண்டும் என்று ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

தமிழக முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கமல் கூறிய கருத்துக்கு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி. ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

ஊழல் நடந்திருப்பதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்ய சொல்லும் நடிகர் கமல் அடுத்து யாரை ஆட்சி செய்ய சொல்கிறார் என்று தெரியவில்லை. அதனை அவர் தெளிவாக சொல்ல வேண்டும். ஒரு கேள்வியை கேட்பது ஈ.சி., ஆனால் அதற்கு விடை கிடைக்க வேண்டும்.

கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் வீரர் பந்தை பிடிக்காமல் விட்டுவிட்டால் வேடிக்கை பார்ப்பவர் அய்யோ இப்படி பிடித்திருக்கலாம் என்று கூறுவார். கபடி போட்டியில் விளையாடும் வீரர் எதிர் அணி வீரரை பிடிக்க முடியாவிட்டால், வேடிக்கை பார்ப்பவர் இப்படி பிடித்திருக்கலாமே என்று கூறுவார்.

வெளியில் வேடிக்கை பார்த்து சொல்பவர்கள் யூகத்தின் அடிப்படையில் சொல்வார்கள். களத்தில் உள்ள வீரர்களுக்குதான் அதற்கான கஷ்டம் தெரியும்.

அதுபோல்தான் நடிகர் கமல் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்து பேசி வருகிறார். அரசியல் களத்தில் இறங்கி பார்த்தால்தான் அதற்கான கஷ்டங்கள் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க திட்டமிட்டு வருவதாக பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News