செய்திகள்

கட்சி பதவிகளில் அமைச்சர்களின் டிரைவர்கள், சமையல்காரர்கள்: திவாகரன் குற்றச்சாட்டு

Published On 2017-08-16 04:03 GMT   |   Update On 2017-08-16 04:03 GMT
கட்சி பதவிகளில் அமைச்சர்களின் கைத்தடிகள், டிரைவர்கள், சமையல்காரர்களை தான் அமர்த்தி உள்ளனர். அவர்களை கண்டறிந்து விரைவில் பதவிகள் பறிக்கப்படும் என்று சசிகலாவின் தம்பி திவாகரன் கூறினார்.
மன்னார்குடி:

மன்னார்குடியில் சசிகலாவின் தம்பி திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு அதிக அளவில் இளைஞர்கள் வந்ததில் ஆச்சரியம் இல்லை. அ.தி.மு.க.வுக்கு இளைஞர்கள் வரத்தான் செய்வார்கள்.

அடுத்ததாக வட சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கூட்டம் நடத்தும்போது கட்சி நிர்வாகிகளின் உழைப்பு மற்றும் அவர்களின் செயல்பாடு கவனிக்கப்படும்.

எதற்கும் பயனில்லாத சொத்தையாக தான் கட்சி பதவியில் பலர் இருக்கின்றனர். கட்சியில் ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகள் எந்தவித தகுதியும் இல்லாமல் இருக்கின்றனர்.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் என பலர் அவர்களது வீடுகளில் வேலை பார்த்தவர்கள், அவர்களது கைத்தடிகள், டிரைவர்கள், சமையல்காரர்களை தான் கட்சி பதவிகளில் அமர்த்தி உள்ளனர்.

அவர்களை கண்டறிந்து விரைவில் பதவிகள் பறிக்கப்படும். அதன் பிறகு உண்மையான செயல் வீரர்கள் தான் கட்சி பதவியில் அமர்த்தப்படுவார்கள்.

வருகிற 19-ந் தேதி திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் கூட்டத்துக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் என யாருக்கும் அழைப்பு இல்லை.



அவர்கள் நடத்துவது அரசு விழா. கல்லூரி, பள்ளிகளுக்கு சர்குலர் அனுப்பி அவர்களை அவர்களது கல்வி நிறுவன வாகனத்திலே அழைத்து வந்து உட்கார வைத்து விழா நடத்தப்படுகிறது. அரசு செலவில் விழா நடத்தி கணக்கு காட்டப்படுகிறது.

இவ்வாறு திவாகரன் கூறினார்.


Tags:    

Similar News